LATEST POSTS OF MY DEAR ZOHAN

வீதியின் ஒழுக்கங்கள்

 


வீதியின் ஒழுக்கங்கள்


வீதியில் செல்லும் போது பார்வைகளைத் தாழ்த்த வேண்டும்


قُلْ لِّـلْمُؤْمِنِيْنَ يَغُـضُّوْا مِنْ اَبْصَارِهِمْ وَيَحْفَظُوْا فُرُوْجَهُمْ‌ ؕ ذٰ لِكَ اَزْكٰى لَهُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا يَصْنَـعُوْنَ‏

وَقُلْ لِّـلْمُؤْمِنٰتِ يَغْضُضْنَ مِنْ اَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوْجَهُنَّ

(முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக!


(அல்குர்ஆன் : 24 – 30,31.)  


பணிவாக நடந்து செல்ல வேண்டும் 


وَعِبَادُ الرَّحْمَٰنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا( 63)

அளவற்ற அருளாளனின் அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள். தம்முடன் அறிவீனர்கள் உரையாடும்போது ஸலாம் கூறி விடுவார்கள். 


(அல்குர்ஆன் : 25 – 63.)  


ஆணவத்துடன் நடப்பதும் சப்தமிட்டு பேசுவதும் கூடாது 


31:18 وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِى الْاَرْضِ مَرَحًا ‌ؕ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُوْرٍۚ‏


31:19 وَاقْصِدْ فِىْ مَشْيِكَ وَاغْضُضْ مِنْ صَوْتِكَ‌ؕ اِنَّ اَنْكَرَ الْاَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيْرِ


மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான். “நீ நடக்கும்போது நடுத்தரத்தைக் கடைப்பிடி! உனது குரலைத் தாழ்த்திக் கொள்! குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்” (என்றும் அறிவுரை கூறினார்).

(அல்குர்ஆன் : 31 – 18,19.)  


பாதையின் உரிமைகள் 




‘நீங்கள் சாலையில் அமர்வதைத் தவிருங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், ‘எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை. அவைதாம், நாங்கள் பேசிக் கொள்கிற எங்கள் சபைகள்’ என்று கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும் போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்’ என்று கூறினார்கள். மக்கள், ‘பாதையின் உரிமை என்ன?’ என்று கேட்டார்கள்.

நபி(ஸல்) அவர்கள், ‘(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும் (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்’ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூ சயீத் (ரலி) 

நூல் : புகாரி-2465 

சாலையில் இருக்கும் போது நல்லதை பேச வேண்டும் 

மற்றொரு அறிவிப்பில் ” அழகிய  பேச்சை பேசுதலும் ” பாதைக்குச் செய்ய வேண்டிய கடமையாகக் கூறப்பட்டுள்ளது. 

அறிவிப்பவர் : அபூதல்ஹா (ரலி) 

நூல் : முஸ்லிம்-4365 (4305) 

தொல்லை தரும் பொருளை பாதையிலிருந்து அகற்ற வேண்டும்  

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தீங்கு தரும் பொருளைப் பாதையிலிந்து அகற்றுவதும் தர்மமாகும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி) 

நூல் : புகாரி-2989 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கை என்பது “எழுபதுக்கும் அதிகமான” அல்லது “அறுபதுக்கும் அதிகமான” கிளைகள் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை” என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். நாணமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளைதான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) 

நூல் : முஸ்லிம்-58 

இடையூறை நீக்கினால் சொர்க்கம் 

652. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஒருவர் (தொழுவதற்காக) நடந்து வரும் பாதையில் ஒரு முள் மரக்கிளை கிடப்பதைக் கண்டு, அதை அந்தப் பாதையைவிட்டும் அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்பணி அவரை (ஆரம்ப நேரத்தில் தொழுவதைவிட்டும்) பிற்படுத்திவிட்டது. இப்படிப்பட்ட அந்த மனிதருக்கு அல்லாஹ் நன்றி செலுத்துகிறான். அவருக்குப் பாவமன்னிப்பும் அளிக்கிறான்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி) 

நூல் : புகாரி-652  

நடமாடும் பாதைகளிலும், நிழலுக்காக ஒதுங்கும் 

இடங்களிலும் மலம் ஜலம் கழிப்பது கூடாது  

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சாபத்திற்குரிய இரு செயல்களைத் தவிர்த்து விடுங்கள் என்று கூறினார்கள். மக்கள், சாபத்திற்குரிய அவ்விரு செயல்கள் என்ன, அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார்கள்.

அதற்கு, மக்களின் நடைபாதையில், அல்லது அவர்களின் (ஓய்விடங்களான) நிழல்களில் மலம் கழிப்பதுதான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம்-448 

Comments