நியாயமாகும் தவறுகள்

 



நியாயமாகும் தவறுகள்


ஷைத்தான் அலங்கரித்துக் காட்டுதல் என்றால், ஒருவர் செய்யும் பாவத்தை ஷைத்தான் அவருக்கு நியாயப்படுத்திக் காட்டுவதாகும்.


ஒரு கடையில் பணி புரிகின்ற ஊழியர் கல்லாவிலிருந்து பணத்தைத் திருடுவான். அவ்வாறு திருடுவது பாவமாகும். அந்த ஊழியருக்கும் தெரியும். ஆனால் அவனிடம், “ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை பார்க்கிறாய். உன்னுடைய உழைப்பைப் பயன்படுத்தித் தான் உன் முதலாளி சம்பாதிக்கின்றான்.


ஆனால் உனக்கு மாதச் சம்பளம் வெறும் 3000 தான். ஒரு நாளைக்கு இலட்சக்கணக்கில் சம்பாதிக்கும் உன் முதலாளி உனக்குத் தருவது ஒரு நாளுக்கு நூறு ரூபாய் தான். இது அநியாயம் இல்லையா?’ என்று ஷைத்தான் கேட்கிறான். ஷைத்தானின் இந்த வார்த்தைகள் அந்தத் தொழிலாளியின் உள்ளத்தில் நியாயமாகப்படுகின்றது.


அவ்வளவு தான். கல்லாவிலிருந்து களவாடவும் கையாடல் செய்யவும் ஆரம்பித்து விடுகின்றான். இதில் உள்ள ஓர் உண்மையான நியாயத்தை அந்தத் தொழிலாளி பார்க்கத் தவறிவிடுகின்றான். தன்னை வேலைக்குச் சேர்க்கும் போது முதலாளி தன்னிடம் சொன்ன ஊதியம் என்ன? நாம் அவரிடம் செய்து கொண்ட ஒப்பந்தம் என்ன? மூவாயிரம் ரூபாய் தான். இஷ்டப்பட்டால் இந்த ஊதியத்திற்கு வேலை பார்க்க வேண்டும்.


இல்லையென்றால் இடத்தைக் காலி செய்ய வேண்டும். இந்த அடிப்படை நியாயத்தைப் பார்த்தால் ஷைத்தானின் தப்பர்த்தத்திற்குத் தக்க இவன் தாளம் போட மாட்டான். இது ஷைத்தானின் அலங்காரத்திற்கு ஒரு சிறிய நடைமுறை எடுத்துக்காட்டு.


போர் புரிவதற்குத் தடை செய்யப்பட்ட புனித மாதங்கள் விஷயத்தில் ஷைத்தான் இப்படித் தான் ஒரு நியாயத்தைக் கற்பிக்கின்றான். முஹர்ரம் மாதம் போர் செய்யத் தடை இருந்தாலும் அந்த மாதத்தில் போர் செய்ய நேரிட்டால் அதற்குப் பதிலாக ஸபர் மாதத்தைப் புனித மாதமாக ஆக்கிக் கொள்வோம். வருடத்தில் 120 நாட்கள் புனிதமானவை. அது எந்த நாளாக இருந்தால் என்ன? என்ற நியாயத்தை அவர்களிடம் போடுகின்றான். இதற்கு அவர்கள் பலியாகின்றார்கள்.


ஆனால் இங்கு அவர்கள் ஓர் உண்மையான நியாயத்தைப் பார்க்கத் தவறிவிட்டார்கள். அல்லாஹ் தடுத்தது எந்த மாதம்? அல்லாஹ் புனிதமாக்கியது எந்த மாதம்? அந்த மாதத்தின் புனிதத் தன்மையை மாற்றுவதற்கு நாம் யார்? என்று சிந்தித்து விட்டால் இதிலுள்ள உண்மையான நியாயம் புரிந்துவிடும்.


பரேலவிகளின் போலி நியாயம்


இறந்தவர்களிடம் ஏன் கேட்கின்றீர்கள்? அவர்களை ஏன் அழைத்துப் பிரார்த்திக்கின்றீர்கள்? என்று நாம் கேட்டால் அதற்கு, “நாங்கள் என்ன அவ்லியாக்களிடம் நேரடியாகவா கேட்கிறோம்? அவர்களைப் பரிந்துரைக்கத் தானே சொல்கிறோம்” என்று பரேலவிகள் பதில் சொல்கின்றனர்.


ஷைத்தான் இப்படி ஒரு போலி நியாயத்தை அவர்களிடம் எடுத்துக் காட்டுகின்றான். இந்தப் போலி நியாயம் அவர்களிடம் நல்ல விலைக்குப் போகின்றது. அதனால் அதை நம்புகிறார்கள். இந்தக் கொள்கையைத் தான் மக்கா இணை வைப்பாளர்கள் கொண்டிருந்தனர்.


நேரடியாக என்னிடம் கேள்! நான் உயிர் உள்ளவன். உனது கோரிக்கைக்குப் பதில் அளிப்பவன் என்று அல்லாஹ் கூறுகின்றான். அதனால் உயிருடன் இருப்பவனின் பரிந்துரை கூட அவனுக்குத் தேவை இல்லை. இதில் இறந்து போன ஒருவரை பரிந்துரைக்கு அழைப்பதில் எந்த ஒரு நியாயமும் இல்லையே என்று கேட்கும் போது அவர்களது போலி நியாயம் அடிபட்டுப் போகின்றது.


நாம், ஷைத்தான் அழகாக்கிக் காட்டிய செயலில் இல்லை, சத்தியத்தில் தான் இருக்கிறோம் என்பதற்கும், அவர்கள் அசத்தியத்தில் இருக்கின்றார்கள் என்பதற்கும் மேற்கண்ட இந்த ஓர் எடுத்துக்காட்டு போதும்.


Comments